17 நவம்பர் 2011


சவுதி அரேபியாவில் பணிபுரிய வருவோர் கவனத்திற்கு !


சவுதி அரேபியாவிற்கு பணிப்புரிய வருவோர் கம்பெனிகளில் அல்லது, வீடுகளில், தோட்டங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் தரவில்லை என்றால், அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலை தரவில்லை என்றால், அல்லது மாதம் தோறும் சம்பளம் தரவில்லை என்றால், இன்னும் முதலாளி, அல்லது மேலாளர் போன்றோர் அடித்து வேலை வாங்குபவர் என்றால் கிடைக்கின்ற சம்பளத்தை பெற்றுக்கொண்டு கொடுக்கின்ற வேலையை செய்துகொண்டு அடிக்கின்ற அடியை வாங்கிக் கொண்டு தங்களை அடிமை படுத்திக் கொள்பவர்கள் ஒரு வகையினர்.

மேற்காணும் விதம் ஒப்பந்த மீறல் நடைபெற்றால் சம்பள பாக்கியையும், இதர சலுகைகளையும், பாஸ்போர்ட்டையும்  அவரிடமே விட்டு விட்டு வேறுப் பகுதிகளில் சென்று தலைமறைவாக வேலை செய்ய நினைப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இரண்டாவது வகையினர் தலைமறைவாக வேலை செய்யும் பொழுது லேபர் செக்கிங்கில் பிடிபட்டால் சிறையில் அடைக்கப்பட்டு உறவினர்கள், நன்பர்கள் மூலம் சிறைக்குள் பயண டிக்கெட் அனுப்பப்பட்டு இந்திய தூதரகத்திலிருந்து எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் மூலம் தாயகத்திற்கு அனுப்பப்படுகின்றனர் இது ஒரு வழி இதை இக்காமா ஜெயில் வழி என்றும் அழைக்கப்படுவதுண்டு. 

மக்கா, மதீனாவிற்கு ஸியாரத் வருவோர் தங்களுடைய பாஸ்போர்ட், பயண டிக்கெட்டை தொழைத்து விட்டால் அவர்களை கருணையின் அடிப்படையில் அரசாங்கமே பயண டிக்கெட் இலவசமாக கொடுத்து ஜெத்தாவிலிருந்து அனுப்பிக்கொண்டிருக்கிறது. 

மேற்காணும் இரண்டாவது வகையினர் இடைத் தரகர்கள் மூலம் தங்களையும் புனித பயண யாத்ரீகர்களாக காட்டிக்கொண்டு பாஸ்போர்ட் தொழைந்து விட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் பயணிக்கும் வழியில் பயணிக்கத் தொடங்கினர் இது இரண்டாவது வழி. இதை உம்ரா ஜெயில் வழி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இந்த மனிதாபிமான அடிப்படையிலான நல்ல திட்டத்தை வேலை நிமித்தம் வருவோர் தவறாக பயன்படுத்துவதை அறிந்த சவுதி அரசாங்கம் இவ்வழியாக பயணிப்போர் ஐந்து வருடத்திற்கு சவுதிக்குள் வரக்கூடாது என்று சட்டமியற்றி அவரது கை ரேகை, மற்றும் கண்களை ஸ்கேனிங் செய்து சவுதி அரேபியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தது.

இதே வேறு நாடாக இருந்தால் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த திட்டத்தையே ரத்து செய்து இருப்பார்கள் ஆனால் புனிதஸ்தலங்கள் இருப்பதாலும், யாத்ரீகர்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருப்பதாலும் இத்திட்டத்தை ரத்துசெய்யாமல் இதை தவறாக பயன்படுத்துவோரை மட்டும் கட்டுப்படுத்தியது.

ஒப்பந்ததாரருக்கும், பாணியாட்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும், ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை மீறும்பொழுது அதை தீர்த்து வைப்பதற்காக லேபர்கோர்ட்டை (தொழிலாளர்கள் அமைச்சகம்) சவுதி அரசாங்கம் நிறுவி உள்ளது. சவுதி அரேபியாவில் இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாற்றுவோருக்கு மேற்காணும் விதம் ஒப்பந்ததாரர்களால் அநீதி இழைக்கப்பட்டால் விசாரித்து நீதி வழங்குவதற்காக எல்லா மொழிபேசக் கூடியவர்களுக்கும் மொழியாக்கம் செய்து கொடுப்பதற்காக அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை நன்றாக அறிந்துகொண்டே இந்த வழியாக தங்களுடைய பிரச்சனைகளை தீரத்துக்கொள்ள முயற்சிக்காமல் மேற்காணும் இரண்டு வழிகளில் பயணித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொள்வதுடன் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நல்ல சலுகையும், பாதிக்கப்பட்டவர்ளை விசாரித்து நீதி வழங்குவதற்காக சட்டமியற்றி அதற்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி செயல்படுகின்ற சவுதிஅரேபியா மற்றும் அரபுநாடுகளை பிறநாடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றனர். 

ஏராளமானோர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முறையாக இந்த வழியில் சென்று நீதி கிடைக்கப் போராடாதக் காரணத்தால் பாதிப்பு இவர்களுக்குத் தானேத் தவிற ஒப்பந்ததாரருக்கு அல்ல.

சமீபத்தில் அல்கஸீம் புஃகைரியாவில் நடந்த படுகொலையை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் அந்த சகோதரர் வந்ததிலிருந்தே அவர் முதலாளி எதற்கெடுத்தாலும் அடித்துக் கொண்டே இருந்திருக்கிறார் முதல் தடவை அடி வாங்கிய உடனேயே லேபர் கோர்ட்டில் தஞ்சம் அடைந்திருந்தால் அந்த சகோதரர் அகால மரணத்தை தழுவவேண்டிய அவசியமே வந்திருக்காது. இதனால் துணிந்து கொலை செய்து விட்டு தற்கொலை என்று திசைத் திருப்பி விடும் நிலை உருவாகி விட்டது. 

ஒருவர் எப்பொழுது தனது கஃபிலை (ஒப்பந்ததாரரை) விட்டு ஓடுகின்றாரோ அன்றே அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது பாஸ்போர்ட் அலுவலகத்தில் சவுதி அரசாங்கம் தடைசெய்த ஒன்றை செய்துவிட்டு ஓடிவிட்டதாக ஓடியவர் மீது பொய் புகார் எழுதி அவரது பாஸ்போர்ட்டை அவரது ஒப்பந்ததாரர் ஒப்படைத்து விடுவார். இவ்வாறு எழுதிக் கொடுத்தால் தான் அவருக்கு மீண்டும் விசா எடுக்கமுடியும், உங்களுக்கு இழைத்த அநீதியிலிருந்து அவரை காப்பாற்றிக்கொள்ளவும் முடியும். மேற்காணும் வழியில் பயணிப்பதால் உங்களுக்கு அநீதி இழைத்தவருக்கு நீங்களே செய்து கொடுக்கும் சலுகையாகி விடுகிறது.

நான்கு பேர் துணிந்து லேபர் கோர்ட்டில் ஏறிவிட்டால் அத்து மீறும் முதலாளி மார்களின் கொட்டம் தாமாக அடங்கி விடும். ஒருமுறை லேபர்கோர்ட்டில் சென்று புகார் செய்துவிட்டால் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் பிரச்சனைக்கொப்ப அந்த கம்பெனிக்கு அடுத்த விசா கொடுப்பது பற்றி அரசு அலோசிக்கும் நிலைக்கு தள்ளப்படும். மேலும் தொடர்ந்து புகார்கள் சென்று கொண்டிருந்தால் அரசு சலுகைகள், உரிமங்கள் அiனைத்தும் ரத்து செய்யப்பட்டு கம்பெனி மூடும் நிலைக்கே தள்ளப்படும். இதுபோன்று லேபருக்கு அநீதி இழைத்த பல கம்பெனிகள் மூடப்பட்டிருக்கிறது. பல மஜ்ரா காரர்களுக்கு விசா நிருத்தப்பட்டுள்ளது.

புகார் செய்யப்பட்டபவருக்கு சம்பள பாக்கியா அல்லது சர்வீஸ் பாக்கியா ? இன்னும் என்னப் பிரச்சனையாக இருந்தாலும் லேபர் கோர்ட் மூலம் பலருக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கணக்கு தீர்க்க முடியாத அளவுக்கு கம்பெனியில் வருவாய் இல்லை என்றால் அந்த கம்பெனியிலிருந்து லேபர் கோர்ட் ரிலீஸ் வாங்கிக் கொடுத்து வேறு கம்பெனியில் பணிபுரிய உதவி இருக்கிறது.  

சம்பள பாக்கி, சர்வீஸ் பாக்கி குறைவாக கிடைத்தாலும், அல்லது அறவே கிடைக்க வில்லை என்றாலும் பாஸ்போர்ட், பயண டிக்கெட்டுடன் நிம்மதியாக பயணிக்கலாம். பாஸ்போர்ட்டை இழந்து உம்ரா ஜெயில் வழியாகவோ, இக்காமா ஜெயில் வழியாகவோ அகதிகளாய் உடுத்திய அழுக்கு உடையுடன் பயணித்து மீண்டும் ஐந்து வருடம் திரும்பி வரமுடியாத நிலை ஏற்படாது. கடந்தக் காலங்களில் சவுதியிலிருந்து ஒன்வேயில் பயணித்தால் சுமார் மூன்று வருடம் சவுதிக்குள் வரமுடியாத சட்டம் இருந்தது. அதை இப்பொழுது கை ரேகை  வந்தப்பிறகு அரசு தளர்த்தி விட்டார்கள் அதனால் பிரச்சனை இல்லாமல் ஒன்வேயில் ஊர் சென்றால் அடுத்த நாளே அடுத்த விசாவில் மீண்டும் சவுதி வரலாம். அதற்கு ஒரேவழி என்னப் பிரச்சனையாக இருந்தாலும் லேபர் கோர்ட் சென்று பிரச்சனையை தீர்த்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.

மேற்காணும் விதம் யாருக்காவது அநீதி இழைக்கப்பட்டால் துணைக்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை டாக்ஸி காரர்களிடம் லேபர்கோர்ட்டில் இறக்கி விடச் சொன்னால் லேபர்கோர்ட் வாசலில் இறக்கிவிடுவார்கள்.

லேபர்கோர்ட்டில் உங்கள் புகார் மனுவை பெற்றுக் கொண்டதும் உங்கள் ஒப்பந்ததாரருக்கான சம்மன் உங்களிடமேக் கொடுத்து அனுப்பப்படும். உங்களிடம் கொடுத்து அனுப்புவதற்கு காரணம் உங்கள் மீது பொய் புகார் எழுதி அருகிலுள்ள காவல் நிலையத்தில் உங்கள் பாஸ்போர்டடை உங்கள் ஒப்பந்ததாரர் ஒப்படைத்து விடக்கூடாது என்பதற்காகவும், இது முதல் உங்களுக்கும் அவருக்குமிடையிலான ஒப்பந்தம் முறிந்து விட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும், இனி நீங்கள் இந்த அரசின் கௌரவ பிரஜை உங்கள் மீது அவர் அத்து மீறக்கூடாது என்பதற்காகவும் உங்கள் மூலமாகவே அவருக்கு இன்ன தேதியில் வந்து ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படுகிறது.

அதற்கடுத்து இந்திய தூதரகத்திற்கு சென்று நீங்கள் லேபர் கோர்ட்டில் புகார் செய்து அதற்காக பெற்றுக்கொண்ட கடிதத்தை தூதரக அதிகாரியிடம் காண்பித்தால் உங்களுக்கு வழக்கு நடந்து கொண்டிருப்பதை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதி இந்திய அரசு முத்திரைப் பதித்து தருவார்கள் அதை வைத்துக்கொண்டு உங்கள் வழக்கு முடியும்வரை தாராளமாக வெளியில் நடக்கலாம் போலீஸ் பிடிக்க மாட்டார்கள்.

ஒப்பந்ததாரரின் மொழி பேசக் கூடியவர்களே லேபர் கோர்ட்டில் அதிகாரிகளாக இருப்பதால் புகாரை திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சம் கொள்ள வேண்டாம்  அவ்வாறு கண்டிப்பாக நடக்காது. நீங்கள் அஜமி (அரபி மொழி பேசத் தெரியாதவர்); என்பதாலும், உங்கள் ஒப்பந்ததாரர் (அரபி பேசத் தெரிந்தவர்) என்பதாலும் வக்கீல் வைத்து வாதாடும் நிலையை அரசு ஏற்படுத்த வில்லை. ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதா ? இல்லையா ? என்பதை மட்டும் லேபர் கோர்ட்டில் ஒரு அதிகாரிப் பார்வையிடுவார்.

ஒருவேளை கணக்கு தீர்ப்பதில் கூட, குறைவு ஏற்படலாம் ஆனால் உங்கள் பிரச்சனைத் தீர்க்கப்படாமல் திருப்பி அனுப்ப மாட்டார்கள் உங்கள் பாஸ்போர்ட் உங்களுக்கு கிடைத்து சரியான வழியில் பயணித்து தாயகம் செல்வதற்காக உதவுவார்கள் இதனால் நீங்கள் அடுத்த விசாவில் வேறொரு கம்பெனிக்கு தடையின்றி வரமுடியும்.

இந்த நிலை சவுதியில் புதிதாக உண்டானதல்ல இந்திராகாந்தி காலத்தில் இந்தியாவிலிருந்து பணியாட்கள் சவுதி வரத் தொடங்கியதிலிருந்தே உள்ள நிலை ஆனால் அதிகமானோர் பின்பற்றுவதில்லை அன்றிலிருந்து இன்றுவரை இக்காமா ஜெயில், உம்ரா ஜெயில் நிறைந்தே வழிகிறது. லேபர் கோர்ட் வெறிச்சோடிக் கிடக்கிறது. அன்றாவது இக்காமா ஜெயில், உம்ரா ஜெயில் வழியாகப் பயணித்தால் மீண்டும் சவுதிக்குள் வரலாம் என்ற நிலை இருந்தது இப்பொழுது ஐந்து வருடத்திற்கு வரமுடியாது.

விபரம் தெரியாத ஏராளமான சகோதரர்கள் பல லட்சம் ரூபாயை முடக்கி அடுத்த விசாவில் வந்து ஏர்போர்ட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 2-2-2011 அன்று ஆம்பூரைச் சேர்ந்த படித்த சகோதரர் ஒருவர் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தவர் ரியாத் ஏர்போரட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் விசாரித்த வகையில் அவர் உம்ரா ஜெயில் வழியாக பயணித்தவர் என்பது தெரிய வந்தது.

இந்த நாடு அனுமதித்த ஜனநாயக வழியில் போராடி உங்கள் பிரச்சனைகளை இலகுவாக முடித்துக்கொண்டால் உங்களுக்கும் நல்லது உங்களைப் பார்த்து பிறரும் நடைமுறைப்படுத்தினால் ஒப்பந்ததாரர்கள் அத்து மீற மாட்டார்கள். நீங்கள் உம்ரா ஜெயில் வழியாக பயணிப்பதால் பாதிக்கப்படும் யாத்ரீகர்களும் ஐந்து வருடம் இந்த நாட்டிற்குள் எந்த நோக்கத்திற்காகவும் வரமுடியாத நிலை இதனால் ஏற்படுகிறது பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் ஆகலாமா


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்